கபிலர்



ஒரே பெயர் - வெவ்வேறு காலங்கள்



கபிலர் என்னும் பெயரில் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்களைப் பற்றிக் காண்போம்.

1. கபிலர் :

வேத கால மஹரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் மனு வமிசத்தில் தோன்றியவர். பிரம்மாவின் பேரனாகவும் விஷ்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். "சாங்கியம்" என்னும் தத்துவத்தை உருவாக்கியவர். இத் தத்துவத்தைத்தான் பகவத் கீதையில் உலகப்படைப்புத் தத்துவத்திற்குக் கிருஷ்ணர் கையாண்டுள்ளார். சாங்கியத் தத்துவம், இந்தியத் தரிசனங்களுள் பிரதானமானது. கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது பிரகிருதி,, புருடன் ஆகிய இருபொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பௌத்த மதத்தில் இச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. புருடன், அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி, அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது.


2. கபிலர் :

சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர். இவர், அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறம் உடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் இத் திணைபற்றி மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பாடல்களுள் சிறந்து விளங்குவது பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப்பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 வகையான பூக்களையும், சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

இவ்வாறு, குறிஞ்சி பற்றி அதிகம் பாடியுள்ளதால் "குறிஞ்சிக்குக் கபிலர்" என்றே போற்றப்பெறுகின்றார்.

கபிலரின் பாடல்கள் :

புறநானூற்று - 28

பதிற்றுப்பத்து - 10

என்று 38 பாடல்கள் புறப்பொருள் பற்றியவை.

அகத்திணையில் பாடிய பாடல்கள் 197.

ஆக மொத்தம் 235 பாடல்கள் சங்கநூல்களில் இவர் பாடியனவாக இடம் பெற்றுள்ளன.

கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381 இல் இவரது பாடல்களின் பங்கு 10-ல் ஒரு பங்குக்கு மேல் உள்ளது. பெயர் தெரிந்த 475 புலவர்களில் இவர் ஒருவரின் பாடல்கள் மட்டும் 10-ல் ஒரு பங்குக்கு மேல் என்று காணும்போது இவரது கவித்திறனை உணரமுடிகிறது.

இவரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி என்போர் ஆவர்.

( i ) இவர் தன்னை 'அந்தணர்' என்றே கூறுகிறார். "புலனழுக்கற்ற அந்தணாளன்" என இவரை மாறோக்கத்து நப்பசலையாரும் பாராட்டிக் கூறுவார்.

( ii ) மேலே கூறப்பட்டவர்களுள், பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும், அவனது "நன்றா" என்னும் மலையின் மீது ஏறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார்.

(iii) பேகன் தன் மனைவியை பிரிந்து இன்னொருத்தியுடன் கூடி வாழ்ந்த போது பாணர், அரிசில் கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப் படுத்த முயன்றார். என்றும் அறியலாம்.

( iv ) இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்தி ஒன்பது தலைமுறையாக துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர் என்ற செய்தி தெரிய வருகிறது..சங்க கால புலவர்களில் கபிலரே முதன் முதலில் துவாரகைநகரம் பற்றி கூறுகிறார்.

( v ) கபிலர் வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார். அவன்பால் மட்டுமின்றி அவனது பறம்பு மலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாரி பற்றிய இவரது பாடல்கள், இவரது சால்பையும் பாரியின் வள்ளல் தன்மையையும் தமிழகத்தே என்றென்றும் நிலைக்கச் செய்தவை. இவர், மூவேந்தரும் வஞ்சகமாக பாரியை கொன்றது கண்டு உள்ளம் வெதும்பி வெதும்பிப் பாடிய செய்யுட்கள், கற்போரை துயரக்கடலுள் ஆழத்துவன ஆகும்.

( vi ) பாரிக்குப் பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை ஆகிய இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார் கபிலர். அவ்வகையில் விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை சென்று கபிலர் வேண்டியதைப் புறநானூறு தெரிவிக்கிறது.

( vii ) இறுதியில், கபிலர், பாரியின் இரு மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலம் தந்துவிட்டு, தாமும் வடக்கிருந்து உயிர் நீத்து தன் நண்பனான பாரியுடன் விண்ணகம் சேர்ந்தார்.

இவரின் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.